அப்பாடி! டிக்கேட் கடைச்சாச்சு! படம் இதோ இப்போ ஆரம்பிச்சுடும்!
இதோ, இப்போ அட விளம்பரம் காமிக்கறாங்க திரையரங்குல.
ஹே! சூப்பர்! இதோ படம் ஆரம்பிச்சாச்சு! இதோ சென்சார் போர்டு சான்றிதழ்!
ம்ம்ம்ம், என்ன இது படம் ஒரு ரீலுன்னு போட்டுருக்கு! அடக்கடவுளே! ஏதோ டாக்குமெண்டரி படம்!!!
போச்! இனிமேல் ப்ளேடுதான்.
"கூ, குக்கூ!!!!"
ட்ரான்ன்ன்ன்ன்ன், ட்ரடடான்ன்ன்ன்.
"ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுவத்தி ஆறு... குரங்குமலை அடிவாரம் இந்தியாவின்...."
என்று அடிக்குரலில் ஆரம்பித்து படம்பார்க்கும் முன் காண்பிக்கப்படும் அக்மார்க் ஜவ்வு என்ற அளவிலேயே குறும்படங்களைப் பற்றி நினைத்திருந்தேன். எனவே, ஞாயிறு மதியம் காண்பிக்கப்படும் மாநில மொழித் திரைப்படம், இந்த திரையரங்கில் காண்பிக்கப் படும் டாக்குமெண்டரிப் படம் எல்லாம் சமச்சீர் உணவாக வேப்பங்காய் வாசத்துடனேயே எனக்கு இருந்தன.
குறும்படங்களின் மேல் (என்ன பேருடா இது கு...று...ம்... படம்!) இப்படியாகப்பட்ட பிரியத்துடனே இருந்தும் திரு. அருண் வைத்யநாதனின் குறும்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்பட மாணவர்கள் எடுத்த ஒரு படம் பற்றி எங்கோ படித்திருந்தேன், ஒரு எறும்பின் அசைவுகளை அண்ணாசாலை/மேம்பாலத்தில் படமெடுத்து இருப்பதாக. சரி, அது மாதிரியாகவாவது ஏதேனும் சுவையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று வேண்டிக்கொண்டுதான் திரை அரங்கினுள் நுழைந்தேன்.
'ஆங்கிலப்படம், ஆனால் உரையாடல்களே கிடையாது' என்ற இன்ப அதிர்ச்சியை முதலில் என் காதால் கேட்டும், காதில் ஒரு ஈ கூட மொய்க்கவில்லை. அப்பாடி! யாரும் கைதட்டினால் நானும் புரியாமலேயே கைதட்ட வேண்டாம், யாரும் சிரித்தால் புரியாமலேயே நானும் சிரிக்க வேண்டாம்.
ஆச்சா, முதல் படம் திரைக்கு வந்தது. ஒரு திருடன் நைசா ஒரு வீட்டுக்கு வரான். அங்க ஒரு பொண்ணு மட்டும் தனியா இருக்கா. ஆஹா, குறும்படத்தில் சஸ்பென்ஸா? த்ரில்லர் எல்லாம் கூட குறும்படத்துல எடுப்பாங்களா என்ன? இந்த வளையாட்டு நல்லா இருக்கேன்னு நெனச்சேன். அந்த திருடன் ஒவ்வொரு பொருளா மிரட்டி மிரட்டி எடுத்துக்கறான். அந்த பொண்ணும் பயந்து பயந்து எல்லாத்தையும் தந்துண்டே இருக்கா. அப்பறம், அப்பறம், அப்பறம்? கீழ விழுந்துட்டான்! மயங்கிட்டான்! காக்காய் வலிப்பு! இப்போ அந்த பொண்ணு போலீசுல சொல்லி பிடிச்சுக் குடுக்காம, இரும்பு சாவிக்கொத்து கைல குடுத்து, தண்ணி தெளிச்சு காப்பாத்தறா! Forgiven! படத்தோட பேரு. நானும் Forgiven. குறும்படங்களைப் பத்தி தப்புத்தப்பா நெனச்ச என்னை, நானும் மன்னிச்சுட்டேன்!
அப்பறம் அடுத்த படம் Noose. ஆரம்பத்துல இதுலயும், (anti)ஹீரோவின் அசைவுகள்/செயல்கள் ஏதோ அவார்ட் வாங்கின படம் மாதிரியே இருந்தன. போகப்போக சூடு புடிச்சு, எல்லா அசைவுகள் செயல்களுக்கும் அர்த்தம் புரிந்தது. தன் வாழ்க்கையின் கடைசி அத்யாயத்தில் தத்தளிப்பவன் என்று நினைக்கப்பட்டவன், மனைவி(?!)க்கு சங்கு ஊதிவிட்டு முடிவுரை எழுத முற்பட்டுக்கொண்டிருந்தான். நூவ்சு, உன் மூவ்சு எல்லாமே நியூவ்சு.
அடுத்ததா ஒரு படம் வந்துச்சுபா. உள்ளத்தை அள்ளித்தா! மன்னிக்கவும், உள்ளத்தை அள்ளித்தா சுந்தருடையது. ப்ரி(ரை)ல்லியண்ட் அருணுடையது. ரெண்டுமே மேட்டருடையது. முழுநீள நகைச்சுவை, ஆக்ஷன் காமடி, குபீர் சிரிப்பு என்று 'சி' செண்டர் ரசிகர்களை(யும்) கவர்ந்திழுக்கும் படம் இது(வும்). இறைவா, இது மாதிரியே எல்லாரும் குறும்படம் எல்லாம் எடுத்து வைக்கக் கூடாதா!
அப்பறம் அடுத்த படத்தில் காட்சிகள் ஆரம்பிக்கும் பொழுதே பவர் கட். இங்க கரண்ட் இருந்தும் அங்க பவர் கட். படத்தோட பேரே பவர் கட். இதை 'பஞ்ச தந்திர'த்தில் வரும் 'சின்ன கல்லூ, பெர்யே லாபம்' பாணியில் பார்க்கவேண்டும். வெள்ளித் திரையில் காண்க.
வெய்ட்டீஸ்! இப்படி பாதியிலேயே படிச்சுட்டு எழுந்து போனா உங்க கணினித் திரை ரத்தம் கக்கும். இன்னும் இருக்கு.
இத்துடன் அருண் வைத்யநாதன் திருட்டுத் தொழிலை விட்டு விடுகிறார். திருடுவதில் ஆர்வம் குறைந்து குடும்பத்தின் மீது பார்வை திரும்புகிறது. (படங்களின் கதையமைப்பு பற்றிதான் சொன்னேன், நிஜ வாழ்க்கை விவரம் இன்னும் சரிவரத் தெரியவில்லை).
எனவே அடுத்த படம் நிஜமாகவே கொஞ்சம் சீரியஸான தீம்/கதை. "மாமே, ஆஸ்பத்திரீல சேக்காட்டி வேலைக்கே ஆவாது. ஆனா வீட்ட வுட்டு உன் மனைவி வரவும் மாட்டாங்கறதும் எனக்குப் புரியும்" என்று ஆங்கிலத்தில் வசனத்துடன் இந்த படம்( அப்பாடி, நல்லவேளை. படம் முழுதும் எல்லாரும் மெதுவா பேசினதால எழுத்து கூட்டி புரிஞ்சுண்டேன்). கதாநாயகி படுக்கையில் படுத்திருந்தும், கடைசியில் ஏதோ மகப்பேறு கேஸ்தான் என்று சுபமான முடிவாகவே (இதர படங்கள் போல்) முடியும் என்று நினைத்து ஏமாந்தே போனேன். நெஜமாவே சீரியஸ் படம். ஆனால் புல்லாங்குழல் இசையுடன் படக்கதாபாத்திரங்களுடன் என்னாலும் அவர்களது இளமைக் கால நினைவுகளுக்குச் சென்று பின் மீண்டும் அவர்களுடனேயே நிகழ் காலத்துக்கு வரமுடிந்தது. புரிந்தது. அவர்களுக்குள்ளான நெருக்கம் புரிந்தது. இறக்கும் தருவாயில் மனைவி விருப்பப்படி புல்லாங்குழல் வாசிக்கும் கதாநாயகனின் அன்பு புரிந்தது. As she wished... இறக்கும் தருவாயில்... இல்லை, அணுஅணுவாக இறக்கும் தருவாயில் கருணைக்கொலை செய்யச்சொல்லும் மனைவியின் நிலைமை புரிந்தது. கதாநாயகன் தலையணையால் அவளைத் மூச்சை அடக்கும் பொழுது.. .புரிந்தது. படிப்படியாக மனைவியின் அசைவுகள் அசங்காமல் நின்றுபோகிறது... புரிந்தது. ம்ம்ம், புரிந்தது, குறும்படம். :-(
கடைசியாகக் காட்டப்பட்ட படம், Stinking Cigar. ம்ஹூம். இது கொஞ்சம் high-level. படம் முடிந்ததும் அருணே சொன்னபிறகுதான் அடிப்படைக்கதை புரிந்தது. பிறகு பத்ரியின் வலைப்பதிவு படித்ததும்தான் கடைசியில் சுருட்டு வாசனை போக லிஸ்டரின் குடிக்கிறாள் என்றும் புரிந்தது. இன்னும் இதுபோல சில படங்கள் பார்த்துப் பழகினால் இந்தப் படமும் ரசித்துப் பார்க்க முடியும்.
போதும், இதற்குமேல் என்னால் தொடர முடியவில்லை. As you wish பற்றி மீண்டும் நினைத்தவுடன் ரொம்ப ஃபீலாகி கைகள் அழுகின்றன, கண்கள் டைப் அடிக்கின்றன. டாட்டா!
வால்துண்டு: இந்த படத்தின் தீம் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டால் காதுகளும் ஃபீல் ஆகும். இந்தப் பட இசை அமைப்பாளரின் வலைத்தளத்தையும், வலைப்பதிவையும் காணத்தவறாதீர்கள். பார்ட்டி செம ஜாலி டைப் போல.

5 dharma adigal
3/14/2005 1:44:35 PM
|
24.211.236.69
|
|
|