web counter

'முக'வரி

லேட்டஸ்ட் டிப்ஸ்
தொண்டை வறண்ட உணர்விருந்தாலோ அல்லது தாகம் எடுத்தாலோ, தண்ணீர்க் குடிக்கவும்...

லேட்டஸ்ட் பொன்மொழி
Blogல கேலண்டர் வைக்கலாம், ஆனா கேலண்டர்ல blog வைக்க முடியாது.

என் tech blog (தமிழில்)
தமிழில் .NET blog

இதுக்கு முன்னாடி...

 

Powered By...

மீட்டர் ஏறாம மேட்டர தெரிஞ்சுக்க...
Use RSS feeds to save your valuable time

நாக்கு சொல்லைத் தட்டாதே
28-08-2009 06:21:37

disclaimer: இது யாரையும் புண்படுத்த எழுதப்பட்ட பதிவல்ல. எனக்கு ஏற்பட்ட புண்ணின் வடுவிற்குப் பின் எழுதப்பட்ட பதிவு...

வாரிசில்லா சாஸ்ட்டர் இத்தனை நாளா ஒரு பாடு படுத்திடுச்சு. இப்போ கொஞ்ச நாளாதான் ஆஃபீஸ் ஒழுங்கா போக ஆரம்பிச்சுருக்கேன். ஆஃபீஸ்ல லீவுக்கும் ப்ரச்சனை இல்லை, க்ளைண்ட்டாலயும் ப்ரச்சனை இல்லை, ப்ராஜக்ட் மேனேஜராலயும் ப்ரச்சனை இல்லை. ப்ரச்சனை என்னன்னா, இந்த ரோஸ் கலர்ல நாக்கு நாக்குன்னு ஒன்னு வாய்க்குள்ள இருக்கே அதுதான். நான், பனீர் பட்டர் மசாலா, பிஸ்ஸான்னு வளைச்சு வளைச்சுத் தின்ன நாக்கு. கடைசீல கொழம்பு ரசம் கூட கிடையாதுன்னா, எப்படித் தவிச்சுருக்கும்? அம்மை வந்ததால, உணவு விஷயத்துல ரொம்ப கட்டுப்பாடா இருக்கவேண்டியதாப் போச்சு.

ஒரு வழியா, (சுவையான உணவு) உண்ணா விரதத்தை நீக்க சட்டசபையில் ஒரு தீர்மானம் உருவாக்கப்பட்டது. உணாவிரத முடிவு நாளாக, சுபயோக சுபதினமான சனிக்கிழமையும் குறிக்கப்பட்டது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் (வாய், நாக்கு, வயிறு) காலையிலிருந்து ஒரே ஒரு இளநீர் மட்டும் குடித்து விட்டு பட்டினியுடன் கிடந்தனர். அரசர் எவ்வெவ்விதமான சுவையான உணவெல்லாம் வழங்குவார் என்று திட்டமிட்டனர், எந்த ஹோட்டலுக்குப் போகலாம், என்ன சாப்பிடலம் என்று ஆலோசனையும் கொடுத்தனர். உடல் ஜனநாயகத்தில் மக்கள், அரசர், ஆலோசனை எல்லாம் உண்டு.

ஒரு வழியாக, கிட்டத்திட்ட ஒரு மாத காலமாக எடுக்காமல் வைத்திருந்த என் சைக்கிளை எடுத்து செனடாஃப் ரோட்டில் இருக்கும் பஞ்சாபி தாபாவுக்குச் செல்லலாம் என்று தீர்மானித்தேன். செத்துப்போய் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் நாக்குக்கு உயிர் கொடுத்து உத்வேகமளிக்கும் சரியான மந்திரவாதி பஞ்சாபிதாபாதான் என்று தோன்றியது. அதோடு 40 கி.மி. சைக்கிளில் போகுமளவுக்காவது stamina வரவேண்டும் என்ற எனது ஐந்தாடுத் திட்டத்தின் முதல் கட்டத்துக்கும் இது உதவும். சைதாப்பேட்டையிலிருந்து பஞ்சாபி தாபா, பிறகு அங்கிருந்து மீண்டும் சைதாப்பேட்டை, பிறகு இன்னும் ஒரு 5-10 கி.மீ. என்காவது சைக்கிளில் சுற்ற வேண்டும்.

பஞ்சாபி தாபா
திட்டப்படி எனது பெட்ரோல் போடத்தேவையில்லாத பல்சரைக் கிளப்பினேன். கொலைப்பசியில் வண்டி பஞ்சுபோல் பறந்தது. பஞ்சாபி தாபாவினுள் பில்லிங் கௌண்டரில் (சின்னக்கௌண்டரில் வரும் கௌண்டர் இல்லை, என்கௌண்டரில் வரும் கௌண்டர்) இருப்பவர் அப்பொழுதுதான் என் தலையில் ஒரு பெரிய RDX தூக்கிப் போட்டார். ”பஃபே எல்லாம் 3 மணியோட க்ளோசுங்க...” க்ளைண்ட் முன் டெமோ காட்டும்பொழுது சொதப்பும் டெவலப்பர் மாதிரி என் நாக்குக்கு சமாதான்ம் சொல்ல முடியாமல் ஒரு நொடி தவித்துத்தான் போனேன். ”ஒரு மணி நேரம்தானே லேட்டா வந்துருக்கேன், 80 ரூபா தரேன். பாதி பஃபேவாவது குடுங்களேன்” என்று கேட்க நினைத்தேன். துக்கத்தில் குரல் கூட வெளிவரவில்லை. ‘ச்சீச்சீ, இந்த பஞ்சாபி தாபா புளிக்கும். நாம நேரா சஞ்சீவனத்துக்குப் போலாம்' என்ற மனசாட்சியாரின் குரல்தான் சமாதானத்தைத் தந்தது.

சைக்கிளில் ஏறி பார்க் ஷெரட்டன் வழியாக ஆழ்வார்ப்பேட்டை நோக்கி பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன். பார்க் ஷெரட்டனுக்குள் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. நான், பனீர் பட்டர் மசாலா, மலாய் கோஃப்த்தா எல்லாம் இருக்குமா? இருக்குமோ என்னமோ. ஆனால் "புளிக்கும்". நாரத கான சபா வழியாகப்போகும் போது அந்த சபா கேண்டீன் கண்ணில் பட்டது. உள்ளே போனால் இட்லியோ தோசையோ கிடைக்குகும். வெறும் சோளப்பொறி.

அப்படியே லெஃப்ட்ல ஒடிச்சி நேரா போ சொல்லோ கங்கோத்ரி வந்துச்சுபா. அப்பாலிக்கா வுட்லேண்ட்ஸ் ஹோட்டலு. அது இர்ந்த எட்த்த பாக்கசொல்லோ ஒரே ஃபீலிங்கா பூட்சி. எத்தினி ப்ளாகருங்க மீட்டிங்க்சு நடந்த்ருக்கும். எத்தினி மரத்தடி மீட்டிங்கு நட்ந்த்ருக்கும். சுஜாதாவக்கூட பார்த்தோமே அங்க வெச்சு.

சோலையில் சஞ்சீவனம்
மனதைக் கல்லாக்கிக்கொண்டு நேரே சார்ட்டர்ட் அக்கௌண்ட்டண்ட்ஸ் அசோசியேஷன் சிக்னல் வழியாகப் போக ஆரம்பித்தேன். சீட்பெல்ட்டை அவசியம் அணிந்துகொள்ளுமாறு சென்னை போக்குவரத்துக்காவல் துறை அறிவுறுத்தியது. பெல்ட் மட்டுமே கைவசம் (இடுப்புவசம்) இருக்கிறது. சைக்கிளுக்கு சீட்பெல்ட் எதற்கு? என்று எனக்கு நானே போட்டுக்கொண்ட மொக்கையைச் சகிக்க முடியவில்லை. நல்ல வேளையாக CA Insitute எதிரில் ஒரு பானிப்பூரிக்கடை கண்ணில் பட்டது. ஒரு ப்ளேட் பானிப்பூரி சாப்பிட்டால் ஒன்று treat குடிமுழுகிவிடாது. ஏதோ நாக்கிற்கு முதலுதவி செய்வதாக நினைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. மடக் மடக் என்று பானிப்பூரிக்காரன் தட்டில் வைத்த பூரிக்களை கபளீகரம் செய்தேன். நல்ல காரம். பானிப்பூரி தண்ணீர் குடிக்காமல் பானிப்பூரி தின்றுதான் என்ன பயன்? அதையும் ஒரு கல்ப் அடித்தேன். ரொம்ப நாட்கள் கழித்து காரமாக சாப்பிடுவதால் கண்களில் கங்கையோ, கூவமோ எதுவோ ஒன்று அதிகம் சுரந்தது. ஆனால் க்வாட்டரும், ஆஃபும் கூட பானிப்பூரித் தண்ணீருக்கு ஈடாகாது.

மறுபடியும் ரதத்துல ஏறி, சஞ்சீவனத்து வாசலில் சைக்கிளை நிறுத்தினேன். மாடியில் ஏறப்போகும் முன்பு ஏனோ மனசுக்குள்ள ஒரு டிங் டாங் பெல் அடிச்சுது. வழக்கமா எப்பவுமே இப்படித்தான், தனியா ஏதாவது பெரிய ஹோட்டல், கல்யாண மண்டபம்ன்னு எங்கயாவது போறதுன்னா இந்த பெல் கண்டிப்பா அடிக்கும். இது அடிச்சா அப்பறம் எங்க போக நெனச்சேனோ அங்க போக முடியாது. ஏதாவது ஒரு தயக்கம் வந்து தடுத்துடும். 1to1help.netல கௌன்சலிங்க் போகணும். என்னமோ ஒரு இனம் புரியாத தயக்கம். பசி வெட்கமறியாது, ஆனா தயக்கமறியும்.

ஆகமொத்தம், சஞ்சீவனம் போற திட்டமும் ஃபனால். டின்னர் சாப்படறதுக்குள்ள எப்படியாவது lunchஐ முடிச்சுடணும்னு சைக்கிள் பூட்டைத் திறந்தேன். அனேகமாக இதே ரேஞ்சில் போனால் இன்றைக்குள் எப்படியும் 60 கி.மீ. பயணம் சைக்கிளிலேயே முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று தோன்றியது. sterling road வழியாக வள்ளுவர்க்கோட்டம் சென்று அங்கிருந்து கோடம்பாக்கம் போனால் நம்ம வீட்டைப் பிடித்துவிடலாம். வடபழனியில் இருக்கும் வசந்த பவன் ‘நம்ம வீட்டு'க்குப் போய் நிரம்ப நாள் ஆகிறது.

வழியில் ஜிகர்த்தண்டா
என் நாக்குக்கு நல்லுணவுபோல், என் சைக்கிளுக்குக்கும் நல்லெண்ணைப் போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதனால் கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் ஏறும்முன் சைக்கிள் செய்ன் அனாமத்தாகக் கழண்டு விழுவதை என் கண்களாலேயே காணும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. வண்டியை ஓரம்கட்டி செய்னை மடமடவென்று அதனிடத்தில் பொருத்தி நிமிர்ந்த பொழுது, கையெல்லாம் கரிக்கரியாக அழுக்கு. நல்ல வேளை, நானும் கறுப்பு அந்த அழுக்கும் கறுப்பு என்பதால் பார்ப்பவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் தெரியாது. இருந்தாலும் உள்ளங்கையில் திட்டுத்திட்டாகத் தெரிந்துதானே தீரும்? இதோடு சாப்பிடவேறு வேண்டுமே? சைக்கிள் ஹேண்டில்பாரில் வைத்ததும் அதிலிருக்கும் அழுக்கு கையிலும், கையில் இருக்கும் அழுக்கு அதிலும் மாறி மாறி ராஜாமாரி, டோனிமாரி விளையாடின. ஒருவழியாக மலையேறி.... ச்சே... ப்ரிட்ஜ் ஏறி இறங்கியதும் கொஞ்ச தூரத்திலேயே அந்தக்கடை வந்தது. சைக்கிளில் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் (?!) அந்த ”மதுரை காதல்” என்ற பேனர் கண்ணிலிருந்து தப்பாமல் கண்ணில் பட்டது. நிறுத்தி படித்துப் பார்த்தால், மதுரை ஜிகர்த்தண்டா!

சமீபத்தில் 2007ல் நடந்த புத்தகப்பொருட்காட்சியில்தான் இதை அருந்தும் வாய்ப்பு கிடைத்தது. STAR Xerox வாசலிலேயே சின்ன ஹோட்டல் மாதிரி டேபிள், சேர் எல்லாம் செட் பண்ணி வைத்திருந்தார்கள். கை அலம்ப கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டேன். வலதுபுறம் ஒரு சந்தில் குழாய் இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு ஸ்பெஷல் ஜிகர்தண்டாவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு சந்தில் நுழைந்தேன். அங்கே ஒருவர் எல்லா க்ளாஸ் டம்ப்ளர்களையும் சிரத்தையாக சபீனா போட்டு அலம்பிக்கொண்டிருந்தார். “பால் வாசனை வரும்ல, அதான் தண்ணி ஊத்த்தி மட்டும் கழுவாம நல்லா சுத்தமா பௌடர் போட்டு தேய்ச்சுடுவோம்” என்றார் அவர். அதே கடையில் வேலை செய்பவராம். இவ்வளவு சுத்தமாக டம்ப்ளர்களை அலம்பி வைக்கிறார்களே என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு கையிலுள்ள அழுக்குக்கரியையும் அதே சபீனா போட்டு சுத்தப்படுத்த முடிந்ததில் இன்னும் நிம்மதி. டென்ஷன் இல்லாமல் நிதானமாக ஜிகர்த்தண்டாவை ருசிக்கலாம்.

ஸ்பெஷல் ஜிகர்த்தண்டா 20 ரூபாய். பார்சல் என்றால் 25 ரூபாய். பார்சல் என்றால் வாங்கிய 20-40 நிமிடத்திற்குள் எடுத்துப்போய் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவேண்டுமாம். இல்லாவிட்டால் கெட்டுப்போய்விடும். ரொம்ப நன்றாக இருந்தது.

இப்படியாக இன்னும் சிலபலதை போகிறபோக்கில் ரொப்பிக்கொண்டு வசந்த வீடு வந்ததும், அங்கே அதிகம் சாப்பிட முடியவில்லை. ஒரே ஒரு செட் தயிர்வடை, கோபி மஞ்சூரியன், 4 நான், பன்னீர் பட்டர் ம்சாலா மட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டேன்.

வீட்டுக்கு வரும்போது, வடபழனி சிக்னல் தாண்டி சைக்கிள் செய்னில் உள்ள ஒரு லின்க் கழண்டு எங்கோ விழுந்து விட்டது. வேகமாகப் போனதால் செய்னும் எங்கேயோ ரோட்டிலேயே தெறித்து விழுந்து கண்டுபிடிக்க முடியவில்லை. நல்ல வேளையாக செந்தில் டவர்ஸ் தாண்டி வரும் இடதுபுற ரோடில் ஒரு சைக்கிள் கடை இருந்தது. புது செய்ன் மாட்டி நல்லபடியாக பேட்டைக்கே வந்து சேர்ந்தேன்.
Next comment

உடம்பு சொஸ்தமானது பற்றி சந்தோஷம். அடிக்கடி எழுது. அடிக்கடி பானிபூரி சாப்பிடாதே.
பாரா     28 ஆகஸ்ட் 2009
உடம்பு சொஸ்தமானது பற்றி சந்தோஷம். அடிக்கடி எழுது. அடிக்கடி பானிபூரி சாப்பிடாதே.
பாரா     28 ஆகஸ்ட் 2009
மிகவும் நன்றாக உள்ளது :-)
Srini     29 ஆகஸ்ட் 2009
test
testbot     04 ஆகஸ்ட் 2010





உங்கள் பெயர்/முகமூடிப் பெயர்
வலைப்பூ
மின்னஞ்சல்
தர்ம அடி